சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை: மனோ

1026245785நிலையற்ற கோமாளி அரசியலை முன்னெடுக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. ஆயினும், அவரது பயனற்ற கருத்துகள் ஒரு சிலரைக் கூட தவறாக வழிநடத்திவிடக் கூடாது என்பதால், இந்த பதிலை தர விரும்புகிறேன் என்று தேசிய கலந்துரையாடல் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என நான் ஒருபோதும் கூறவில்லை.  உண்மையில் தம் பிள்ளைகளை இழந்து வாழும் தமிழ் பேசும் தாய், தந்தையர்களினதும், கணவர்மார்களை இழந்து நிற்கும் தமிழ் சகோதரிகளினதும், மூத்தோரை இழந்து நிற்கும் இளையோரினதும், உணர்வுகளையும், இழந்துபோன உறவுகளை நினைந்து அவர்கள் தம் சோகங்களை பகிர்ந்து கொள்வதையும், சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ள முயல வேண்டும் என நான் கூறினேன்.

ஜே.வி.பி அமைப்பிற்கு, தம் 1971, 1989 ஆகிய ஆண்டுக்கால போராட்ட மாவீரர்களை கொண்டாட இருக்கின்ற அதே உரிமை, வடக்கில் கிழக்கில் தமிழர்களுக்கும் இருக்கின்றது என்பதை சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென கருத்து வெளியிட்டிருந்தேன். இந்த நிலையில் குறுக்கிட்ட ஊடகவியலாளர்கள், ஜேவிபி அன்று தடை செய்யப்பட்டிருந்த போது அந்த உரிமை அவர்களுக்கு அன்று வழங்கப்பட்டிருக்கவில்லை.

இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு. எனவே இது சட்டவிரோதம் இல்லையா? என்று கேள்வி எழுப்பியபோது,

தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற காரணத்தால், அவர்களது பெயர்களை குறிப்பிடாமல் தமிழ் மக்கள் நினைவஞ்சலிகளை நடத்துவதில் சட்டப் பிரச்சினை இல்லை என்றும், எதிர்காலத்தில் அந்த தடை நீக்கப்படுமானால், அப்போது ஜே.வி.பியை போன்று, புலிகளின் பெயரிலேயே நிகழ்வுகளை தமிழ் மக்கள் நடத்தலாம் என்றும் நான் கூறினேன்.  இதை சிங்கள மொழியில், ஒருமுறை அல்ல, கடந்த ஒருவார காலத்தில், நான்கு இடங்களில் கூறியிருந்தேன்.

தென்னிலங்கை ருஹுனு சிங்கள தேசத்தில், சிங்கள மொழியில், இக்கட்டான இறுக்கமான சூழலில், நான் கூறிய இந்த கருத்துகளுக்காக எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றோர் உண்மையில் என்னை பாராட்ட வேண்டும்.  ஆனால், வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு வாய்வீரம் பேசுவதிலேயே காலத்தை கழித்தபடி, தமிழ் மக்களை மீண்டும், மீண்டும் துன்பத்தில் இழுத்துவிடும் அரசியலையே செய்துவருகின்றார். எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு செய்திகளை பகுத்தாயும் தகைமை இல்லாமல் போனதையிட்டு நான் ஆச்சரியமடையவில்லை.

இலங்கையின் தென்கோடியில் வாழும் சிங்கள மக்கள் மத்தியில் சென்று நான் சிங்கள மொழியில் கூறிய கருத்துகளை அரைக்குறையாக விளங்கிக்கொண்டு, அதை திரித்து வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு பேசி, இந்த நாட்டின் பேரினவாத வாய்களுக்கு நாள்தோறும் தீனி போடும் செயலை அவர் மேற்கொள்கிறார்.

ஒப்பீட்டளவில் எழுந்து வரும் ஒரு நல்ல சூழலை நாவடக்கமும், புரிதலும் இல்லாமல் நாசமாக்கி வரும் எம்.கே.சிவாஜிலிங்கம் போன்ற வாய்பேச்சு வீரர்களிடமிருந்து தமிழ் மக்கள்,  குறிப்பாக சொல்லொணா துன்பங்களை கண்டுவிட்ட வடகிழக்கு தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எம்.கே.சிவாஜிலிங்கம், தனது கட்சியான ரெலோ இயக்கத்தின் கட்டுப்பாட்டையும், தனது கட்சி இடம் பெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டையும் தன்னிச்சையாக எப்போதும் மீறி வருபவர்.  தனது கட்சி தலைமைக்கும், கூட்டு தலைமைக்கும் ஒருபோதும் உரிய மரியாதையை தராதவர். இவரை தமிழீழ விடுதலை புலிகளும் ஒரு பொருட்டாகவே கருதி இருக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்து குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு, “தன்னை தேடி தமிழ் தேசியவாதிகள் குருநாகலுக்கும் வந்துவிட்டார்கள்” என்று மேடையில் கூறும் ஒரு சந்தர்ப்பத்தை மகிந்த ராஜபக்சவுக்கு இவர் ஏற்படுத்தி கொடுத்தார்.

இதனால் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்ட பலன் என்ன? அதேபோல் கடந்த 2015ஆம் வருட ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழர்கள் தம் வாக்குகளை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தன்னிச்சையாக அறிவித்திருந்தார்.  இது எமது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரானது. அதேபோல் 2010 வருட ஜனாதிபதி தேர்தலில், கட்சி கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக, இவர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

இவை கோமாளி அரசியல் நடவடிக்கைகள் என்று தோன்றினாலும், தமிழர் வாக்குகளை பிரித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுகின்ற சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற திட்டமிட்ட தீய முயற்சிகள் இல்லையா?

இவற்றின் பின்னணி என்ன? இதற்காக எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு என்ன கிடைத்தது? இவர் தனது கட்சி கட்டுப்பாட்டை மீறி ஏன் இவ்விதம் நடந்துக்கொண்டார்? என ஆராயும் போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்.  என்னைப்பற்றி கேள்வி எழுப்புவதை நிறுத்திவிட்டு எம்.கே.சிவாஜிலிங்கம், தன்னைப்பற்றிய இந்த தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.” என்றுள்ளார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s