முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது பாகிஸ்தான்

தென்ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

மெதுவான தன்மை கொண்ட இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் சேர்த்தது.

கைவசம் 8 விக்கெட் இருந்த போதிலும் தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அதிரடியாக ஆட முடியாத அளவுக்கு பாகிஸ்தான் பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்து வீசினர்.

அதிகபட்சமாக அம்லா 108 ரன்களும் (நாட்-அவுட்), அறிமுக வீரர் வான்டெர் துஸ்சென் 93 ரன்களும் எடுத்தனர். 

அம்லாவுக்கு இது 27-வது சதமாகும். இதன் மூலம் 27 சதங்களை அதிவேகமாக அடித்த (167 இன்னிங்ஸ்) வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு இந்திய கேப்டன் விராட் கோலி 169 இன்னிங்சில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருந்தது.

அதை அம்லா முறியடித்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இமாம் உல்-ஹக் 86 ரன்களும் (101 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஆட்டம் இழக்காமல் முகமது ஹபீஸ் 71 ரன்களும் (63 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), பாபர் அசாம் 49 ரன்களும் விளாசினர்.

போர்ட் எலிசபெத் மைதானத்தில் பாகிஸ்தான் அணி இதுவரை தோற்றது கிடையாது. அந்த பெருமையை (4 வெற்றி, ஒரு முடிவில்லை) தக்க வைத்துக் கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி டர்பனில் நாளை நடக்கிறது.

தோல்விக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்து விட்டோம். எங்களை விட பாகிஸ்தான் அணியினர் உண்மையிலேயே சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

இதே போல் மிடில் ஓவர்களில் அவர்களின் பந்து வீச்சும் அபாரமாக இருந்தது. இது போன்ற ஆட்டங்களில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறுகையில், ‘இமாம், ஹபீஸ், பாபர் அசாம் ஆகியோர் தங்கள் பணியை நேர்த்தியாக செய்தனர். இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *