ஐ.பி.எல். ஏலம் இறுதிப்பட்டியலில் 346 வீரர்கள்

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் வருகிற 18-ந்தேதி ஜெய்ப்பூரில் நடக்கிறது. ஏலத்திற்காக 1,003 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர்.

ஐ.பி.எல். ஏலம்

இதில் தங்களுக்கு தேவையான வீரர்கள் என்று அணி நிர்வாகங்கள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் பட்டியலை சமர்ப்பித்தன. இதன் அடிப்படையில் 346 வீரர்கள் கொண்ட இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவற்றில் இருந்து 70 வீரர்கள் ஏலம் மூலம் அணிகளுக்கு ஒதுக்கப்படுவார்கள்.

இதில் பிரன்டன் மெக்கல்லம், கோரி ஆண்டர்சன் (இருவரும் நியூசிலாந்து), கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரன் (இங்கிலாந்து), மலிங்கா, மேத்யூஸ் (இலங்கை), ஷான் மார்ஷ், டார்சி ஷார்ட் (ஆஸ்திரேலியா), காலின் இங்ராம் (தென்ஆப்பிரிக்கா) ஆகிய 9 வீரர்களின் அடிப்படை விலை தலா ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதிக விலை பட்டியலில் எந்த இந்தியரும் இடம் பெறவில்லை.

கடந்த ஏலத்தில் ரூ.11½ கோடிக்கு விலை போன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1½ கோடி ஆகும். தென்ஆப்பிரிக்காவின் மோர்னே மோர்கல், ஸ்டெயின், இங்கிலாந்தின் பேர்ஸ்டோ உள்ளிட்டோரை ரூ.1½ கோடியில் இருந்தும், இந்திய ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, தென்ஆப்பிரிக்காவின் அம்லா, டுமினி, நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் ஆகியோரை ரூ.1 கோடியில் இருந்தும் ஏலம் கேட்கலாம். இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் விலை ரூ.75 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கும். வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் ஹெட்மயரின் தொடக்க விலை ரூ.50 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *