டிவியில் விளம்பரப் படங்களை வெளியிடும் வாட்ஸ் ஆப்: ஏன் தெரியுமா?

பேஸ்புக், வாட்ஸ் ஆப், கூகுள் போன்ற பிரபல இணையதளங்கள் மூலம் பரவும் பொய்யான செய்திகளைக் கட்டுப்படுத்த அந்த நிறுவனங்கள் கடுமையாக முயன்று வருகின்றன. உச்சநீதிமன்றத்தின் கண்டிப்புக்குப் பிறகு கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் அரசுடன் இணைந்து வதந்திகளைத் தடுப்பதில் ஒத்துழைப்பதாகக் கூறியுள்ளன.

இதன்படி, வாட்ஸ் ஆப் நிறுவனம் எதிர்வரும் தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படங்களை ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.

ஏற்கெனவே ரேடியோ மூலம் இதனைச் செய்துள்ள வாட்ஸ் ஆப் தற்போது டிவி மூலம் செய்ய அதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

“போலி செய்திகளைத் தவிர்ப்பது பற்றிய மூன்று விளம்பரப் படங்கள் டிவியிலும், பேஸ்புக் மற்றும் யூ டியூபிலும் வெளியாகும். அவை ஒன்பது மொழிகளில் ஒளிபரப்பப்படும்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலின் போது பொய்யான செய்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் விரிவான செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த விளம்பரப் படங்கள் ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம், வங்காளம், தெலுங்கு, அசாமி, குஜராத்தி, மராத்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இருக்கும்.

இந்தப் படங்களைத் தயாரிப்பதற்காக இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் அனுபவங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டிருப்பதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *