2வது டெஸ்ட் – நியூசிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்

நியூசிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்னில் வீழ்த்தியது பாகிஸ்தான்பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
அதிகபட்சமாக ஹாரிஸ் சோகைல் 147 ரன்னும், பாபர் அசாம் ஆட்டம் இழக்காமல் 127 ரன்னும் எடுத்தனர்.
அதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி, யாசிர் ஷா பந்து வீச்சில் சிக்கி 90 ரன்னில் சுருண்டது. யாசிர் ஷா 8 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
நேற்று 3-வது நாள் ஆட்டநேரம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. டாம் லாதம் 44 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 49 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டாம் லாதம் அரை சதமடித்து வெளியேறினார். அடுத்து இறங்கிய ஹென்றி நிகோலஸ் டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ராஸ் டெய்லர் 82 ரன்னிலும், ஹென்றி நிகோலஸ் 77 ரன்னிலும் அவுட்டாகினர்.
அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
இறுதியில், நியூசிலாந்து அணி 112.5 ஓவரில் 312 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளும், ஹசன் அலி 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய யாசிர் ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றி மூலம் இரு அணிகளும் தலாஒரு வெற்றியை பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3-ம் தேதி தொடங்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *