மத்திய வங்கி குண்டுவெடிப்பு குற்றவாளிகள் மூவரின் மனுவும் நிராகரிப்பு

மத்திய வங்கி குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள, தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மூவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

72 க்கும் மேற்பட்டோரை படுகொலை செய்தனர் என்று, குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அந்த மூவரையும் கொழும்பு மேல்நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டு தண்டனை வழங்கியிருந்தது.

தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 200 வருடங்கள் சிறைத்தண்டனையை இரத்து செய்யுமாறு கோரியே மேற்படி மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான தீபாலி விஜயசுந்தர மற்றும் அச்சல வேங்கபுலி ஆகியோரின் தலைமையிலான நீதியரசர் குழாமினால் இன்று அழைக்கப்பட்டது.

அந்த மனுவை பரிசீலனைக்கு எடுக்காமலே அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த மேன்முறையீட்டு மனு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான விக்கினேஸ்வரநாதன் பத்திரன், கதிராகுமனம் சிவகுமார் மற்றும் செல்வகுமார் நர்மதன் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

மத்திய வங்கி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பிலான வழக்கு அதிக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்திலும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் கொழும்பு மேல்நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *