சம்பந்தன் – அனுர சந்திப்பு

சம்பந்தன் - அனுர சந்திப்புஅரசியல் ரீதியாக அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் அனைத்தும், அரசமைப்புக்கு மாறானவை என, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், நேற்று (05), மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பு நிறை​வடைந்த பின்னர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனநாயகம் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் அரசியல் சாசனம் பின்பற்றப்படல் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்த அவர், அரசமைப்பை மீறி எந்தச் செயற்பாடுகளிலும் ஈடுபட முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அத்தோடு, பிரத​மரொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை அத்தோடு, புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டமை அனைத்தும், அரசமைப்புக்கு முரணானவை என்றும் அவர் கூறினார்.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தும், ஜனநாயகத்தின் இறையாண்மையை இல்லாமல் செய்கின்றது என்றும் இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அவற்றை தடுப்பது தங்களது கடமையாகும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் சார்பாக, தங்களால் ஆற்றவேண்டிய கடமையிலிருந்து ஒரு போதும் தவறப்போவதில்லை என்று கூறிய அவர், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து விட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கொடுத்து வாங்குகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார் திஸாநாயக்க

நாட்டில் நடைபெறும் ஜனநாயக மீறல்களுக்கு எதிராக, நம்மால் ஒன்றிணைய முடியும் என்பதை ஆராயும் பொருட்டே, எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது எவ்வாறு என்பது தொடர்பில், எதிர்கட்சிகளான நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

பொதுமக்களுடன் இது குறித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்கவும் அரசியல் சதியை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கவும், எமது தலையீட்டை செலுத்துவது என்று, இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *